சீமையில் வாடிய சிவகங்கை வாரிசு

 

சிவகங்கைச் சீமை என்றாலே,  வீர மங்கை வேலு நாச்சியாரும், கம்பீரத் தோற்றப் பொலிவோடு,

 

சாந்துப் பொட்டு தளதளங்க

சந்தனப் பொட்டு கமகமக்க

மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த

 மருது பாண்டியரும் தான் தமிழர் எவரின் நினைவுக்கும் வருவார்கள்.  குருதி கொப்பளித்து விடுதலை வேட்கையில்  சிவந்து கிடந்த அந்த மண்ணின் மைந்தன் என்ற வகையில் மருது பாண்டியர் வாரிசுக்கு நடந்த பயங்கரம் பற்றிய சிறு குறிப்பை நம் மக்களோடு பகிர்வதே இந்தத் தொகுப்பு.

குறு நிலங்களாக, பாளையங்களாக தமிழகம் தன்னாட்சி பெற்று தலை நிமிரந்து நின்ற காலம். சிவகங்கைச் சீமை தன்னேரில்லாத அதன் சமஸ்தானமாக வலிவுடனும, பொலிவுடனும் நிமிர்நது நின்றிருந்தது.  வெள்ளையர் அவர் வசூல் உரிமைதனை ஆற்காட்டு நவாபிடம் இருந்து பெற்று பாளையங்களை வரி கட்டுமாறு அழுத்தம் கொடுத்த நேரம்.  ஆனால், வெள்ளையர்கள் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் இருந்த ஒரே குறுநில மன்னர்கள் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் மட்டுமே!. வெள்ளைத் துரை மார்களின் வேட்டைத் தோழர்களாகவும், விளையாட்டு நண்பர்களாகவும் திகழ்ந்தவர்கள் மருதிருவர்.  மருது சகோதரர்களின் மிக நெருங்கிய நண்பராய் இருந்த கர்னல் வெலஷ் தனது ‘இராணுவ நினைவுக் குறிப்புகள்’ என்ற நூலில் தாங்க இயலாத் துயரத்துடன் தமது நண்பர்களான மருது சகோதர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

பெரிய மருது சிறந்த வேட்டைக்காரர். வாழ்வின் பெரும் பகுதியை காட்டில் சுற்றித் திரிந்தே கழித்தவர்.  நல்ல நிறம். பொதுமக்கள் அவரை வெள்ளை மருது என்றே அழைத்தனர். உடல் வலிமை கொண்ட இவர், ஆங்கிலேயரின் கனமான விக்டோரியா ராணி நாணயத்தை இரு விரல்களினால் வளைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்.  புலி வேட்டைக்கு ஐரோப்பியர்களுடன் செல்வது வாடிக்கை. அந்த வேட்டைகளில் புலியை முதலில் கொல்பவர் பெரிய மருது தான்.

 



சின்ன மருதுவின் கையில்தான் நிர்வாகம். அவரது தலையசைவை மக்கள் சட்டமாக நினைத்தனர்.  அவரது அரண்மனையில் ஒரு காவலாளி கூடக் கிடையாது.  யாரும் உள்ளே செல்லலாம்.. வெளியே வரலாம்… அவ்வளவு நம்பிக்கை, பய பக்தி..

மருதுகளிடம் இருந்துதான், வளரி வீசவும், களரி சுற்றவும் கற்றுக் கொண்டேன் என அன்போடு நினைவு கூறும் கர்னல் வெல்ஷ் இறுதியாக அவர்கள் மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டதையும், தொடையில் காயமுற்று, கால் முறிந்து சாதாரண குற்றவாளிகளைப் போல் திருப்பத்தூரில் (சிவகங்கை மாவட்டம்) தூக்கிலிடப்பட்டதையும் வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்.

நட்பாக இருந்தவர்களுக்குள் அப்படி என்ன விரிசல் ஏற்பட்டது. அப்படியே இதே காலகட்டத்தில் நிகழந்த வீர பாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக்கு வாருங்கள்.  கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும், தம்பிச் சென்ற அவர் தம்பி ஊமைத்துரை தஞ்சம் புகுந்த இடம், மருது சகோதரர் அரண்மனை.  தன்னவரை இன்னொரு இனத்திடம் காட்டிக்கொடுக்காத நன்னெஞ்சம் மீது வஞ்சம் தீர்க்கவே சிவகங்கை சீமை முழுவதுமே அழித்து ஒடுக்கப்பட்டது, ஆங்கிலேய ஏகாதபத்தியத்தினால்.


பி்.ஏ. கிருட்டிணன்

1813 ஆம் ஆண்டு கோர்லே எனும் ஆங்கிலேயர் எழுதிய குறிப்புகளைக் கொண்டு பி்.ஏ. கிருட்டிணன் தமது ஆய்வுக்கட்டுரையில் சிவகங்கைச் சீமை மட்டுமல்லாது அனைத்துப் பாளைங்களின் மீதும் ஆங்கிலேயருக்கு உண்டான  கோபத்தை விளக்குகிறார். சிவகங்கைச்சீமையை தீக்கிரையாக்கி, பெண்டு  பிள்ளைகளைத் தவிக்க வைத்ததோடு நில்லாமல் வாரிசுகளே தங்கி விடாமல் வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கும் வேலைகளில் ஈடுபட்டது, ஏகாதிபத்தியம்.

குடும்பங்களில் இருந்த ஆண்மக்கள் அனைவரையும் பிடிக்கப்பட்டு இராணுவ முகாம்களில் எந்த வித விசாரணையும் இல்லாமல் தூக்கிலிடும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.   கட்டை விரல் அளவு இடத்தைக்கூட மாற்றானுக்கு விட்டுத் தர மாட்டோம் என மருதரசர்கள் இறுதிவரை உக்கிரமாகப் போர் புரிந்தனர்.  இறுதியில் விதி வசத்தால் 1801 ஆம் ஆண்ட இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.  அத்துடன் திருப்தி அடையாத அக்கிரம ஆங்கிலேய அரசின் கர்னல் அக்னியூ, 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி ஒரு அரசாணை வெளியிட்டான். அதன்படி, சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி உட்பட்ட மருதரசர்களின் தளபதிகளைப் பிடித்துக் கொடுத்தால் 1,000 கூலிச்சக்கரங்கள் பரிசாக வங்கப்படும் என்று… எப்படியோ சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி உட்பட தளபதிகள் மற்றும் முக்கிய வீர்ர்கள் என மொத்தம் பிடிபட்ட 72 பேரை நாடு கடத்தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு கைதிகளாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  மலேசிய நாட்டின் இன்றைய பினாங்கு தான் இந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ். 

சின்ன மருதுவின் மகனான முத்து வடுகு என்ற துரைச்சாமி சிறுவனாக சிவகங்கை  அரண்மனையில் ஓடி விளையாடுவதைக் கண்டு இரசித்தவர் கர்னல் வெல்ஷ்.  கர்னல் வெல்ஷ் தனது நூலில் இப்படித் தொடர்கிறார். 

‘1802 பிப்ரவரி வாக்கில் நான் தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்குத் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன்.  கைதிகளைக் கப்பலில் ஏற்றி விடும் பொறுப்பை லெப்டினன்ட் ராக் ஹெப்டிடம் ஒப்படைத்த அந்த நாளை என்றும் என்னால் மறக்க இயலாது. கலகத்தில் ஈடுபட்டதால் ‘நாடு கடத்தல்’ தண்டனைக்கு உட்பட்ட கைதிகள் அனைவரும் அங்கு இருந்தார்கள்.  அங்குதான் எனது பழைய நண்பர்

சின்னமருதுவின் மகன் முத்து வடுகு எனும் துரைச்சாமியை கைதியாகக் கண்டேன். காளையார் கோவிலுக்கும், சிவகங்கை அரண்மனைக்கும் நான் சென்று திரும்பும் நேரமெல்லாம் சுவை மிகுந்த தேர்ந்தெடுத்த ஆரஞ்சுப் பழங்களை கூடை கூடையாக எனக்கு அனுப்பி வைத்து மகிழ்வுற்ற சின்ன மருதுவின் மகன் கைகளிலும் கால்களிலும் விலங்கோடு என் கண் முன்னே!!! அவரது காவல் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், அவரைத் தப்ப வைக்க என்னால் இயலவில்லை. ஆனால், அழுத்தமாக அவரைப் பிணைத்திருந்த விலங்குச் சங்கிலிகளைத் தளர்த்தி விட்டேன்.  உரிய மரியாதையுடன் அவரை நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தேன் என்று கர்னல் வெல்ஷ் குறிப்பிடுகிறார்.

காலம் ஓடுகிறது.  பினாங்கின் முதல் கவர்னர்ஜெனரலாக இருந்தவர் சர் பிரான்சிஸ் லைட்.  இவரது மகளைத்தான் தாம் மேலே கண்ட கர்னல் வெல்ஷ் திருமணம் செய்து கொண்டார்.   இதே சமயம் பாஞ்சாலங்குறிச்சியில் வீர பாண்டிய கட்ட பொம்மனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்தொழித்த மேஜர் பேனர்மேன் அதிகாரியாக பினாங்கில் பணி புரிந்து வந்தார்.

அவர் ஒரு கிறித்துவ சபையை பினாங்கில் கட்டிக் கொண்டு இருந்தார். கட்டிடப் பணிகளுக்காக கைதிகள் வரவரைக்கப் பட்டனர். அந்த நேரத்தில் நமது கர்னல் வெல்ஷ் மாமனார் வீட்டு விருந்தினராக பினாங்கு சென்றிருக்கிறார்.  திருச்சபை கட்டிடப் பணிகளைப் பார்வையிடச் சென்றார். கட்டிடப் பணிகளுக்கு வந்திருந்த கைதிகளில் ஒருவரின் முகம் கர்னல் வெல்ஷின் நினைவில் உறைந்ததாகத் தெரிகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பாக வாட்டசாட்டமாய் இளமையும் செழுமையும், வசீகரமும் ஒன்று சேரந்திருந்த சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி தான் உடல் நலிந்து மிகுந்த சோர்வுடன் வதுக்கும் மீறிய முதுமையோடு நின்றிருந்தார்.  கர்னல் வெல்ஷ் நெகிழ்ந்து  நெக்கருகி துரை சாமியிடம் அன்போடு பேசி இருக்கிறார். 

மிகுந்த துயரத்தில் இருந்த துரை சாமி தான் ஒரு கடிதம் தருவதாகவும் எப்படியாவது அதனைச் சிவகங்கையில் உயிரோடு இருக்கும் தமது உறவினர்களிடம் சேரத்து விடும்படி மன்றாடினார். ஆனால் ஆங்கில அரசின் கண்டிப்பான விதி முறைகளின் காரணமாகவும் தனது பதவியின் காரணமாகவும் தன் முன்னே பரிதவிப்போடு நின்ற மறவர் குல மாணிக்கத்துக்கு உதவ இயலாமற் போனதை வேதனையோடு விவரிக்கிறார் கர்னல் வெல்ஷ்.

வட்டம், மாவட்டம் போன்ற கட்சி நிர்வாகிகளெல்லாம் குறு நில மன்னர்களாக உலா வரும் இன்றைய நிலையில் சிவகங்கைச் சீமையையே தன் வாள் வலியாலும், தோள் வலியாலும் ஆண்ட மருது பாண்டியரின் வாரிசு ஒரு கடித்த்தைக் கூடத் தன் உறவினரிடம் சேர்க்க இலாமற் போனது வரலாற்றின் கருப்புப் பக்கமே!!.. அதன் பிறகு துரை சாமி என்ன ஆனார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.  இந்த விபரங்கள்

பற்றிப் பல கள ஆய்வுகள் செயதவர் எமது இனிய நண்பரும் தமிழ் பற்றாளரும் , ஆராய்ச்சியாளருமான அமரர் டாக்டர் ஜெயபாரதி அவர்கள்.  டாக்டர் ஜெயபாரதி அவர்கள் எங்கள் பகுதியான சிங்கம்புணரியைப் பூர்விகமாகக் கொண்டவர். இந்தோனேசியாவில் மேடான் நகரில் பிறந்தவர்.  மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்று மலேசிய அரசின் சுகாதாரத் துறையில் மருத்துவராகப் பணி  புரிந்து ஓய்வு பெற்று அமர்ர் ஆவர். பல்கலை வித்தகர். அவரது ஆய்வுகள் பல துறைகளிலும் பலருக்கும் வழி காட்டியாக உள்ளது.

தூக்கிலிடப் படுவதற்கும் முன்பாக பெரிய மருது கர்னல் அக்னியூவிடம் தமது இறப்புக்குப் பிறகு தம்முடைய வாரிசுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தமது சொத்துக்கள் நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உருவிய வாள் மீது சத்தியம் வாங்கி விட்டு அதன் பிறகே தூக்கு மேடை ஏறி இருக்கிறார்.  அக்னியூ துரை சத்தியம் செய்ததோடு சரி.. நரி வேலை  பாரத்து விட்டான்.  கடைசியாக 1891 ஆம் ஆண்டு மே மாதம்18 ஆம் தேதி துரைசாமி அவர்களின் மகன் மருது சேர்வைக்காரர் ஒய்வூதியம் கேட்டு மதுரை ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளிக்கிறார். அதில், அவரது தந்தையார் நோய் வாய்ப்பட்டு வயது முதிர்ந்த நிலையில் சென்னைக்கு வந்ததாகவும், பாதுகாப்பு கருதி மதுரையில் தங்க அனுமதி கேட்டதாகவும், ஆனால் திடீரென நோய் முற்றிச் சிவகங்கை கொண்டு செல்லப்பட்டு அங்கேயே மரணம் அடைந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு மேல் ஒன்றும் தகவல்கள் இல்லை.

ஆங்கில ஏகாதிபத்தியம் எத்தகைய கொடுமைகளை செய்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  சின்ன மருதுவின் மகன் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார் என்ற வரலாற்றுப் பக்கங்களை எவரும் அறிந்திலர்.  தமிழ் ஆர்வலர்கள், தமிழினத் தலைவர்கள் என்று தம்மைக கூறிக்கொள்வோர், வரலாற்று ஆசிரியர்கள், இளவரசர் துரைசாமியின் வாழ்வின் இருண்ட பக்கங்களைத் தேடி அவற்றில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்.  துரைசாமிக்குக் கிடைத்த சிறிதளவு வெளிச்சம் கூட நாடு காக்க தம் வாரிசுகளைத் தவிக்க விட்ட அந்த 71 மாவீர்ர்களுக்கு கிடைக்கவில்லை.  இந்த வரலாற்றுச் சுவடின் வழி வரும் அடுத்த தலைமுறையினராவது துரைசாமி மற்றும்  அவருடன் பயணித்த அந்த 71 பேர் பற்றிய தகவல்களைத் தேடி ஆவணப் படுத்த வேண்டும் என்பதே எம் கோரிக்கை….

மறவர்தம் ஆற்றல் மனதில் என்றும் சாகாது?

மாவீரர் கனவுகள் மண்ணை விட்டுப் போகாது!!

கருத்துகள்

  1. மருதிருவர் வீரம் -- களத்திலும் மனத்திலும் நிகரில்லாதது. ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள் என்றஸ பேருண்மையை மிக அழகாக அழுத்திருத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரம் பிறந்து தியாகம் சிவந்து
      ஈரம் சுரந்து ஈனம் களைந்து
      வாழும் சிவகங்கை நம் சீமை அல்லவா ?

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 28-இந்தோனேசியாவை இன்றும் வலம் வரும் தமிழ்/ இந்திய சொற்கள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..