தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 32 - சிபிச்சக்கரவர்த்தி சதை அரிந்த சரிதம் - தமிழக - சாவகத் தொடர்புகள்
சிபிச்சக்கரவர்த்தி சதை அரிந்த சரிதம் - தமிழக - சாவகத் தொடர்புகள்
பாண்டிய அரசவையின் வாசலில் நின்றிருந்த காவலனை நோக்கி, புயல் போன்ற வேகத்துடன் தலை விரி கோலத்துடன், 'வாயிலில் இருப்போனே ...வாய் இல்லோனே' (வாயிலோயே ... வாயிலோயே .) என்ற ஆத்திரம் நிறைந்து அதிரும் சோழர் மண்ணிலிருந்து வந்து நிற்கும் அந்தப் பெண்ணின் பார்வை அனலையே தாங்க இயலாத வாயிற் காப்போன் அரசவைக்குள் ஓடி வந்து மன்னர் முன் பணிந்து தகவலைச் சொன்னான். நிலைமையின் தீவிரம் அறியாத ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் , அந்தப் பெண்ணை உள்ளே அனுமதிக்கச் சொன்னார்.
என்று அடுத்த நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாதவனாய் வாஞ்சையுடன் கேட்ட மன்னனிடம்,
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
என்று தான் பிறந்த ஊரின் பெருமையைக் கூறும் வண்ணமாக ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதனைத் துரத்தி வந்த கழுக்குக்குத் தன் சதையை அரிந்து அளித்த 'சிபி'ச்சக்கரவர்த்தியும், கன்றை இழந்து வாடிய தாய்ப்பசுவின் மன வெம்மை தவிர்க்கும் வண்ணம் தான் பெற்ற மகனையே தேர்க்காலில் பலி கொடுத்த மனு நீதிச் சோழனும் வாழ்ந்த சோழ நாட்டைச் சேர்ந்தவள் என்று நீதி தவறா நெடுங்கோன்மையையும் அனைத்து உயிர்களையும் மதிக்கும் பாங்கினையும் உயர்த்தி நெடுஞ்செழியனை ஒரு படி இறக்கித் தன் வழக்கை தொடர்வாள்.
இந்தச் சிபிச் சக்கரவர்த்தி சோழர்களின் முன்னோடி. சங்க காலச் சோழன். சோழ 'செம்பியன் வழிவந்தவர்கள்' என்று சோழ மன்னர்கள் தங்களை பெருமையுடன் கூறிக்கொண்டனர். இதனால் சோழ மன்னர்களுக்கு 'செம்பியன்' என்ற பட்டப் பெயரும் உண்டு.
இவரின் கதை வடபாரத சிபி
மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வள்ளன்மை மிக்க சிபி, ஒரு கழுகிடம் இருந்து தப்பித்து வந்த புறாவை உயிர் காக்கும் பொருட்டு தம்முடன் வைத்துக்கொண்டார். ஆயின் துரத்தி வந்த கழுகும் ஓர் உயிர் தானே. கழுகின் பசிக்கும் இரை அளிக்க வேண்டிய கடமை தமது தானே என்றெண்ணி, புறாவின் எடைக்கு நிகராகத் தன் உடலின் தசைப்
பகுதிகளை ஒவ்வொன்றாக அறுத்துத் தராசில் வைத்தார். தசை பற்றாததால், தன்
உயிரையே தியாகம் செய்யத் துணிந்து அவரே தராசுத் தட்டில்
ஏறி அமர்ந்தார்.
இந்தச் செய்திகள் கண்ணகி கூற்றாக வரும் சிலப்பதிகாரத்தில் மட்டும் அல்ல. புறநானூற்று பாடல்களும் நிறையப் பேசுகின்றன. புறநானூற்றுப் பாடல்கள் 37, 39, 43 மற்றும் 46 இந்தக்கதைகளைப் பேசுகின்றன. பெருந்தொகை என்னும் நூலும் , கம்ப இராமாயணமும் கூட இந்தக் கதையைத் தன்னுள் கொண்டுள்ளன. ஆக தமிழகம் தலை முறை தலை முறைகளாக அறிந்த கதை தான் சிபிச் சக்கரவர்த்தி தன் தசையை அரிந்த கதை.
அப்படியே நமது பார்வையை இன்றைய இந்தோனேசியாவின் சாவகத் தீவுக்குள் திரும்புவோம். 9 ஆம் நூற்றாண்டில் சைலேந்திர வம்ச அரசர் (மலை நாட்டு அரசு ) சமாரா துங்கா என்பவரால் எழுப்புவிக்கப்பட்ட மஹாயான புத்தர் ஆலயம் உலகின் மிகப்பெரிய புத்தாலயம். காம தாது, ரூபதாது, அரூப தாது என்று மூன்று அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயம், ஒவ்வொரு படியாக மனித மனம் மேலெழுந்து இறைவடிவாக மாறும் என்பதை விளக்கும் வண்ணமே அமைக்கப்பட்டு இருக்கிறது.
பொரோபுதூர் (Borobudur), மத்திய ஜாவா — சாவகத்தின் மஹாயானப் புத்த நினைவுச்சின்னம்.
Image: Wikimedia Commons — “Borobudur temple.jpg”, Syselpunk, CC BY-SA
4.0.
காம தாது, ரூபதாது, அரூப தாது இவற்றில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள், பௌத்த அண்டவியலின் ( Buddhist Cosmology) மூன்று ஆன்மீக நிலைகளைக் குறிப்பதாகும்.
காம தாது (Kama-dhatu - ஆசை மற்றும் இன்ப உலகம்): உயிரினங்களின் உலகியல் ஆசைகள், இன்பங்கள் மற்றும் கர்ம வினைகளைக் குறிக்கும் அடிமட்ட நிலை.
ரூப தாது (Rupa-dhatu - உருவ உலகம்): கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு, முந்தைய பிறவிகள் (சாதக கதைகள்) மற்றும் அறநெறிகளை விளக்கும் மிக நேர்த்தியான கற் சிற்பங்கள் கொண்ட பகுதி இது.
அரூப தாது (Arupa-dhatu - உருவமற்ற நிலை / வெறுமை) : இங்கு சிற்பங்கள் ஏதுமின்றி மிக அமைதியாக வட்ட வடிவ மேடைகளும், அவற்றின் மீது துளையிடப்பட்ட கல்லடைப்புகளுக்குள் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளைக் கொண்ட மணி வடிவ ஸ்தூபிகள் மட்டுமே காணப்படுகின்றன.
சரி, இந்த புத்தர் கோவிலுக்கும், சோழ நாட்டின் பெருமையாக வழக்காடு காதையில் தமிழரின் பத்தினித் தெய்வம் கண்ணகி குறிப்பதற்கும் என்ன தொடர்பு என்று தானே உங்கள் மனம் எண்ணுகிறது. இருக்கிறது தொடர்பு.
மேலே காணும் மூன்று சுற்றுகளுக்குள் நமக்கு இப்போது தேவைப்படுவது, இரண்டவாது சுற்றான ரூப தாது. இங்கேதான் ஜாதகக் கதைகள் (Jataka Tales - 720 பலகைகள்), புத்தர் தனது முந்தைய பிறவிகளில்
விலங்காகவும், அரசனாகவும், துறவியாகவும் வாழ்ந்து காட்டிய இரக்கம், தியாகம் போன்ற நற்பண்புகளைக் கூறும் கதைகள் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. இதில்முதல் தளம் (First Gallery), உள் பக்கச் சுவர்
(Inner Wall), கீழ் வரிசை, பலகை
எண்கள்
(Panel Numbers): 56 மற்றும் 57 ஆகிய பலகைகள், ஒரு திரைப்படத்தின்
காட்சி அமைப்பைப் போல தொடர் காட்சிகளாக ...
· 56-வது
பலகையில் பருந்து துரத்தி வரும் புறா மன்னனின் மடியில்
அடைக்கலமாவது காட்டப்பட்டுள்ளது.
· 57-வது
பலகையில், புறாவின் எடைக்கு ஈடாக மன்னன் தனது
தொடைச் சதையை அறுத்துத் தராசில் வைப்பதையும், அதைக்கண்டு அரண்மனை அதிகாரிகள் துயரப்படுவதையும் மிகத் துல்லியமாகச் செதுக்கியுள்ளனர்.
பொரோபுதூர், முதல் Gallery, Inner Wall, Panel 056 — King Sibi / Śibi: புறாவும்
தராசும்.
Photograph: Anandajoti Bhikkhu / Photo Dharma, 2013; CC BY 2.0.
(High-resolution version from Wikimedia Commons.)
தமிழர் நாட்டில் சங்க காலத்தில் இருந்து பாடப்பட்டு வந்த சிபியின் கதை கடல் கடந்து உலகின் மிகப்பெரிய புத்த கோவிலில் வடிக்கப்பட்டு இருப்பது நமது கலாச்சாரத் தொடர்புகள் கால காலமாய்க் கடல் கடந்து மடல் விரித்து பரவி இருப்பதை கண் முன்னே நிறுத்துகின்றன.
ஆய்வுக் கட்டுரை : கவிக்கிறுக்கன் முத்துமணி
ஆசிரியரின் 2013 இதழில் வெளியான பழைய சிபி relief படம் — தனிப்பட்ட ஆவணப் பதிவு.
கருத்துகள்
கருத்துரையிடுக